தமிழர் எழுச்சி நாள்
தமிழர் எழுச்சி நாளாம் இத்திருநாளில் என்னுடைய முதல் தமிழ் இணையதள கட்டுரையை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்…
40க்கும் மேற்பட்ட ஆங்கில இணையதள கட்டுரைகளை வெளியிட்ட போதிலும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில் இணையதள கட்டுரை பதிவிட வில்லையே என்கின்ற வருத்தம் இருந்தது. சரியான தருணத்திற்காக காத்திருந்தேன், வெளியிடுகிறேன்.
தன் கண் முன்னே நடக்கும் அநீதிகளை கண்டுகொள்ளாமல் சுயநலமாக வாழும் மக்கள் மத்தியில், அநீதிகளையும் ஒடுக்குமுறைகளையும் சகித்துக் கொள்ளாமல் தன் இன விடுதலைக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து போராட துணிந்த ஒரு தன்னிகரற்ற தலைவன் பிறந்த தினம் இன்று.
நவம்பர் 26, 1954 நம் தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த தினம். இன்று அவருடைய 66-வது பிறந்த தினத்தை நினைவு கூறுகிறோம்.
தலைவர் பிறந்த நாள், தமிழர் தலைநிமிர்ந்த நாள்.
நவம்பர் 26, தமிழர் எழுச்சி நாளா ?
தமிழினம் எழுச்சி பெறுவதற்கு பல தலைவர்கள் நம் தமிழ் மண்ணில் தோன்றி இருந்தாலும் அனைவருக்கும் ஒரு சாதி சாயம் பூசப்பட்டு ஒரு சிறிய வட்டத்துக்குள் கொண்டாடப்படுகிற சூழ்நிலை இருக்கிறது.
இப்படி நம் தமிழினம் சாதியாக மதமாக பிரிந்து தமிழராக ஒன்றிணைய முடியாத சூழ்நிலை இருக்கிற இந்த சூழலில் சாதி மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்ட பிரபாகரன் என்ற ஒற்றை பெயருக்கே தமிழினத்தை ஒன்றிணைக்கும் ஆற்றல் இருக்கிறது.
மக்களின் பணத்தை கொள்ளையடிப்பவர்களையும், சினிமாவில் நடிக்கும் பிரபலங்களையும் தலைவர்களாக கொண்டாடும் மக்கள் மத்தியில்
தமிழீழ மண்ணில் தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக மிகப்பெரிய அமைப்பை உருவாக்கி, அதை வழிநடத்தி, உலக நாடு அனைத்தையும் திரும்பிப் பார்க்க வைத்து, போராடிய மக்களுக்காகவே தன் உயிரையும் கொடுத்த ஒப்பற்ற தலைவன் நம் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன். அவர்களின் பிறந்த நாளையே தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாடுவது மிகச்சரியாக இருக்கும்.
இன எழுச்சி
சமீபத்தில் ஒரு பிரபலமான நடிகரின் திரைப்படம் வெளியாக இருப்பதாக ஒரு பதிவு இணையத்தில் பிரபலமடைந்தது, பல ஆயிரக்கணக்கான மக்கள் அதைப் பகிர்ந்து அந்தப் பதிவை பிரபலமடையச் செய்திருந்தனர். அந்தப் பதிவை என்னுடைய நண்பர்களும் பெரும்பாலானோர் இணையதளங்களில் பகிர்ந்தனர்.
ஒரு மாதத்திற்கு முன்பதாக இந்தியா முழுவதும் பேசப்பட்ட ஒரு விஷயம் ஒரு மட்டைப்பந்து போட்டி. அதையும் பலர் பார்த்து பகிர்ந்தனர்.
பொழுதுபோக்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சமுதாய பிரச்சனைகளுக்கு கொடுக்கப்படுகிறதா ?
பொழுதுபோக்குகளில் ஆர்வம் செலுத்தி அதைத் தெரிந்துகொள்ள விருப்பத்துடன் இருக்கும் மக்கள் சமுதாய பிரச்சனைகளின் விளைவுகளையோ அதன் காரணங்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள ?
திரைப்படங்களையோ அல்லது விளையாட்டு போட்டிகளையோ அல்லது வேறு எந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையோ பார்ப்பதோ பகிர்வது தவறல்ல ஆனால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது கவலை அளிக்கிறது.
அளவுக்கு அதிகமான பொழுதுபோக்கு நம்மை அறியாமைக்கு நேராக கூட்டிச் செல்லும்
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் இவ்வாறு குறிப்பிடுகிறார். அறியாமையை விட உலகில் எதுவும் ஆபத்தானது அல்ல.
நாம் வாழும் சமூகத்தில் நாம் சந்திக்கும் அதிகப்படியான பிரச்சினைகளுக்கு காரணம் இந்த அறியாமையே, இந்த பிரச்சினைகளிலிருந்தெல்லாம் நாம் மீண்டு எழ வேண்டும் என்றால் நம் மத்தியில் இருக்கும் அறியாமையை விலக்கி அறிவை பெற்றுக் கொள்ள வேண்டும்.
கியூப விடுதலைக்குப் போராடின சேகுவேராவை கொண்டாடும் மக்கள் தன் இனத்திலேயே விடுதலைக்காக போராடிய வேலுப்பிள்ளை பிரபாகரனை எந்த அளவிற்கு கொண்டாடுகிறார்கள் ?
இன எழுச்சிக்கு அடிப்படையானது நம் இனத்தின் வரலாறு அவற்றை தெளிவாக புரிந்து கொள்வது அவசியம்.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி. நம் தமிழ் இனத்தின் வரலாற்றையும் அடையாளங்களையும் நம் தமிழ் மொழியையும் பாதுகாப்பது நம்முடைய கடமை.
நம் சமுதாயத்தில் இருக்கும் அனைவருக்கும் நம் சமுதாயத்தைப் பற்றிய தெளிவான புரிதலும் அறிவும் இருந்தால் மட்டுமே நம் சமுதாயம் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து நாம் வெளிவர முடியும்.
ஆகவே நம் பிரச்சினைகளிலிருந்து நாம் மீண்டு எழுவதற்கு இன எழுச்சி மிகவும் அவசியம்.
நாம் பிறந்த இனத்தின் மீது பற்று கொள்வோம் அதுவே நம் அடையாளம், வரலாற்றைப் படிப்போம் ! வரலாற்றை படைப்போம். !
என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் தமிழர் எழுச்சி நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்…
என்றும் அன்புடன்…
ரா. டேனியல் ஜஸ்டின்

Comments
Post a Comment